|
வரலாறு.காம் |
திருசெந்தூர் கல்வெட்டு
எஸ். இராமச்சந்திரன்
இடம்: தூத்துக்குடி மாவட்டம் திருசெந்தூரில் தெற்கு ரத வீதியிலுள்ள பன்னிரண்டாம் திருநாள் மண்டபம்.
செய்தி: திருசெந்தூர் முருகன் கோயிலில் நடைபெறும் மாசித்திருவிழாவில் பன்னிரண்டாம் நாள் திருவிழா செங்குந்தர் குலத்தவரின் மண்டகப்படியாக நடைபெறுகிறது. இதற்குரிய கருங்கல் மண்டபம் கட்டுவதற்கு சவமராமங்கலம் வம்சத்தாராகிய பதினான்கு நாட்டுச் செங்குந்த முதலியார் குலத்தவருள் எட்டையபுரம் நடுவம்பட்டி பெரியம்பலம் தலைமையில் பிற அம்பலங்கள் கூடி, தறி ஒன்றுக்கு குறிப்பிட்ட தொகை வசூல் செய்து, பிரமயம் (ஈரோடுக்கு அருகில் உள்ள ஊர்) ஏகானந்த அடிகள் என்பவரது முயற்சியால் மண்டபம் கட்டி முடித்துள்ளனர். இக்கல்வெட்டில் குறிப்பிடப்படும் சபராமங்கலம் என்ற ஊர் முற்காலத்தில் துலைவில்லிமங்கலம் எனப்பட்டது. 'வில்லி' என்பதைச் 'சபரர்' என மொழி பெயர்த்துச் சபரமங்கலம் என வழங்கியிருக்கலாம். தற்போது சிவராமமங்கலம் என வழங்கப்படும் இவ்வூர் திரு வைகுண்டம் வட்டத்துப் பெரும்குளத்துக்கு அருகில் உள்ளது.
காலம்: கி.பி. 1935.
1 சிவமயம் முருகன் துணை
2 திருக்கயிலாய பரம்பரை தேவ
3 க்ஷத்ரிய வருணம் செங்குந்த குல
4 ம் நவ வீரர்கள் புத்திரர்களாகிய மஞ்
5 சன் மாறிலான் வெற்றியான் பேறிலா
6 ன் சலிப்பிலான் என்னும் ஐம்பெருங்
7 கிளைஞர்கலாகிய வல்ல நாடு அம்பலம்
8 சங்கரலிங்க முதலியார் ஏரல் கீழ வூர் அம்
9 பலம் அயயம்பெருமாள் முதலியார் ஏரல்
10 மேலவூர் அம்பலம் வீ.தவசி முதலியார்
11 பொதியமுத்தூர் அம்பலம் ப.அருணாசல
12 முதலியார் நடுவப்பட்டி பெரியம்பலம்
13 வே. அய்யம்பெருமாள் முதலியார் கடலை
14 யூர் அம்பலம் சிவனணைஞ்சா முதலியார்
15 அயன்பொம்மியாபுரம் அம்பலம் ஆ.பெரு
16 மான் முதலியார் நாகலாதபுரம் அம்ப்லம்
17 சண்முக முதலியார் விளாத்திகுளம் முத்து
18 முதலியார் அருப்புக்கோட்டை அம்பலம்
19 சூரியமுதலியார் முதலான சவராமங்கலம் வம்
20 மிசம் 14 நாட்டுச் செங்குந்த முதலிமார்
21 களுக்குப் பாத்தியப்பட்ட திருச்செந்தூர் 12
22 ந் திருநாள் மண்டபத்திற்கு அக்தார் எட்
23 டையாபுரம் நடுவப்பட்டி பெரியம்பலம் மு.
24 அ.வே. அய்யம்பெருமாள் முதலியார் முத
25 ன்மையால் அணியொட்டுக் கால் மண்டபம்
26 செய்வதற்கு [மேற்படி] யூர்களில் தரி 1 க்கு ரூபா
27 28 ஆக வசுலித்து 1097 [வருடம்] தச்சு செய்து
28 1110 [வருடம்] ஆவணி [மாதம்] 24 உ ஞாயிற்றுக் கிழமை
29 உத்திர நட்சத்திரமுங் கூடிய சுபதினத்தில் கிரக
30 ப்பிரவேசம் நடைபெற்றது மேற்பார்த்து வந்த
31 வர்கள் பிரமயம் ஏகானந்த அடிகள் தளரா முயற்சியின்
32 தவப் பெருக்கால் நடந்தேறுவதேயாம்.